கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கிப் படித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் மாணவி மீது மிரட்டல் புகார் அளித்துள்ளது வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பெங்களூரு ஹெப்பல் பகுதியில் தங்கி அங்குள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டிக்ஸின் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி (காதலர் தினம்) இரவு, மாணவியைச் சந்திக்க அழைத்த டிக்ஸின், நள்ளிரவு 1.30 மணியளவில் ஜக்கூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பங்களாவிற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டிக்ஸினின் நண்பரான நிகில் என்பவரும் இருந்துள்ளார். அவர்கள் இருவரும் கட்டாயப்படுத்தி மாணவிக்கு போதை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக மாணவி தன் புகாரில் கூறியதாவது,

“டிக்ஸின் மற்றும் நிகில் ஆகிய இருவரும் எனக்கு கட்டாயப்படுத்தி போதை மாத்திரையை வழங்கினர். நான் மயக்கமடைந்த நிலையில், இருவரும் என்னை மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனைத் தங்களது செல்லிடப்பேசியிலும் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் ஓர் அறையில் அடைத்து வைத்து மிரட்டி, மறுநாள் மதியம் மால் ஒன்றின் அருகே இறக்கிவிட்டனர்.”

பெற்றோருக்குத் தெரிந்தால் கண்டிப்பார்கள் என அஞ்சி அமைதியாக இருந்த மாணவியை, அந்த வீடியோவை காட்டி மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தை மறைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நிகில் என்பவர் காவல் நிலையத்தில் மாணவி மீது பதில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிப்ரவரி 14-ஆம் தேதி மாணவிக்கு நான் காரில் ‘லிப்ட்’ மட்டுமே கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நான் அவரைக் கண்டித்து பேக்கரி அருகே இறக்கிவிட்டேன்.

இதன் பிறகு, தனியார் தொலைக்காட்சி நிருபர் என அறிமுகம் செய்துகொண்ட இம்ரான் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டு, இது குறித்த செய்தியை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்.

எனவே, அந்த மாணவி மற்றும் இம்ரான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிகில் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே சம்பவம் தொடர்பாக இரு தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு போலீஸார் குழப்பமடைந்துள்ளனர். மாணவி வன்கொடுமை செய்யப்பட்டாரா அல்லது இது பணம் பறிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட திட்டமா என்பது குறித்து இரு காவல் நிலைய போலீஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.