ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டம் கிரீன் ஃபீல்டு காலனியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலாம் மாடியில் இருந்த ஏ.சி வெடித்ததில் ஏற்பட்ட தீயால், இரண்டாவது  மாடியில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், குடும்பத் தலைவர் சச்சின் கபூர், அவரது மனைவி ரிங்கு கபூர் மற்றும் மகள் சுஜான் கபூர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இத்துடன், வீட்டில் இருந்த  நாயும் தீயில் கருகி உயிரிழந்துள்ளது.

இந்த பரிதாப சம்பவம் குறித்து, அருகில் வசிக்கும் பெண் ஒருவர் கூறுகையில், “நேரம் காலை 3.10 மணிக்கு எங்களது ஸ்ப்லிட் ஏ.சி-யில் திடீரென தீப்பிடித்து வெடித்தது. எல்லோரும் அலறி  ஓடினோம். தீயை அணைக்கும் போது என் கைகளும் எரிந்தன” என்று தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்கள் பற்றிக் கூறியபோது, “நான் அவர்களுடன் காலை 3.30 மணிக்கு பேசினேன். அவர்கள்  வீடு ‘முழுக்க புகை  நிறைந்துவிட்டது, எங்களைப் அவர்களால்  பார்க்க முடியவில்லை, எப்படி வெளியே வருவது?’ என்று கூறியது இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது ” என அழுதபடியே கூறியுள்ளார்.

சம்பவத்திற்குப் பின்னர் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். ஆனால், அப்பொழுதே முழு கட்டிடம் புகையால்  நிரம்பியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் அங்கேயே உயிரிழந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு  அனுப்பியுள்ளனர்.

தீவிபத்திற்கான காரணமாக ஏ.சி வெடிப்பு மற்றும் சார்ட் சர்க்யூட் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்தச் சம்பவம் தொடர்பாக, “மின் சாதனங்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பாக இருக்கவும், ஏதேனும் பழுது தெரிந்தால் உடனே சரிசெய்யவும்” என பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.