மும்பையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது, அதிக வீரியம் கொண்ட போதை மாத்திரைகளை உட்கொண்ட எம்.பி.ஏ. மாணவ, மாணவிகள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சக மாணவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள நெஸ்கோ (NESCO) மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். தென்மும்பையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. பயின்று வரும் 15 மாணவ, மாணவிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, சக மாணவர் ஒருவர் கொண்டு வந்த ‘எக்ஸ்டசி’ (Ecstasy) எனப்படும் வீரியமிக்க போதை மாத்திரைகளை அனைவரும் உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு வரை போதையில் ஆட்டம் போட்ட நிலையில், திடீரென இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள், பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, 28 வயது மாணவர் மற்றும் 24 வயது மாணவி ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மற்றொரு மாணவிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமாகப் போதை மாத்திரைகளை உட்கொண்டதே இவர்களின் உயிரிழப்புக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாணவர்களுக்குப் போதை மாத்திரை விநியோகம் செய்த அதே கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் மற்றும் இதில் தொடர்புடைய மேலும் 3 பேர் என மொத்தம் 5 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீஸார், அவர்களைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இசை நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், அதனால் உயிரிழப்புகள் நேரிடுவதும் மும்பையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குப் போலீஸார் கடும் நிபந்தனைகளை விதித்து வரும் நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.