
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மட்றபள்ளி பகுதியில் திமுகவைச் சேர்ந்த திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருக்கிறார். இவருக்கு வசந்தா(40) என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திருப்பதியில் வீட்டு கதவை தட்டினர். உடனே திருப்பதி வந்து வீட்டு கதவை திறந்தவுடன் இரண்டு பேரும் கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினர். இதனால் அலறி சத்தம் போட்டபடி திருப்பதி அறைக்குள் ஓடினார். அந்த சத்தம் கேட்டு எழுந்த மனைவி வாசந்தாவையும் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர்.
இதனால் படுகாயமடைந்த வசந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய திருப்பதியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற வசந்தாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்த போது திருப்பதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் வழி பாதை தொடர்பாக தகராறு இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.