மத்தியப்பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டத்திலுள்ள சதேவ் கிராமத்தில் நடைபெற்ற ஒரு ஆன்மீக வழிபாட்டு நிகழ்வின் போது, புனித நர்மதை நதியில் சுமார் 11,000 லிட்டர் பால் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, நாட்டில் பக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஒரு புதிய விவாதம் கிளம்பியுள்ளது. நதிநீரை மாசுபடுத்துவதாகக் கூறி இந்த விவகாரம் தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஐஐடி பேராசிரியர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் அறிவியல் உண்மைகளை விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், அதிகளவில் பாலை ஆற்றில் கலப்பது சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். பாலில் உள்ள கரிமப் பொருட்கள் தண்ணீரில் அழுகத் தொடங்கும்போது, நீரில் கரையும் ஆக்ஸிஜனின் அளவு பெருமளவு குறையும்.
இதனால் ஆற்றில் வாழும் மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் இறக்க நேரிடும். எனவே, ஆன்மீக நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்றாலும், நதிகளின் தூய்மையும் நீர்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பும் சமமாகப் பேணப்பட வேண்டும் என்பதே இந்த சர்ச்சையின் முக்கிய கருத்தாக எழுந்துள்ளது.
