தமிழகத்தில் நம்ம பள்ளி திட்டத்திற்கான நிதி உதவி, பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இணையதளத்தில் மட்டுமே பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சமூகப் பொறுப்புணர்வு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்பை பெறுவதற்கு நம்ம பள்ளி என்ற பெயரில் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 37,558 அரசு பள்ளிகளின் தேவைகள் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்படுகிறது.

இதற்கு வங்கி கணக்கு உருவாக்கப்பட்ட நடைமுறையில் உள்ளது. இனிவரும் நாட்களில் அரசு பள்ளிகளுக்காக தனிநபர், முன்னாள் மாணவர்கள் வழங்கும் நிதி, சமூக பொறுப்புணர்வு நிதி போன்ற எந்த வகை நிதி மற்றும் பொருள்கள் வழங்கப்பட்டாலும் அது நம்ம பள்ளி இணையதளம் மூலமாக மட்டுமே வழங்கப்படுவதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்கள் நன்கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் எந்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளக்கூடாது. இதனை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.