ஆந்திரப்பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டத்திலுள்ள துனி அருகே, 3 வயது சிறுமி ஜான்னவி (Jahnavi) கடந்த ஆறு நாட்களாகக் காணாமல் போயிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சி.எச். அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஒரு பாமாயில் தோட்டத்தில் வசித்து வந்த இந்தச் சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார்.
மேலும் இவரைத் தேடும் பணியில் போலீஸார், மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 50 ஏக்கர் பரப்பளவிலான பாமாயில் தோட்டம் மற்றும் அதை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மூலமும் சோதனைகள் நடத்தப்பட்டும், சிறுமியைப் பற்றிய எந்தவொரு துப்பும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், சிறுமி காணாமல் போன அதே நாளில் காணாமல் போய், பின்னர் இரண்டு முறை வீட்டிற்குத் திரும்பி வந்த அவர்களது வளர்ப்பு நாய் ‘டாமி’ மீது தற்போது அனைவரது எதிர்பார்ப்பும் திரும்பியுள்ளது. இந்த நாயின் உடலில் ஜி.பி.எஸ் டிராக்கர் கருவியைப் பொருத்தி, அதன் மூலம் சிறுமி இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள போலீஸார் திட்டமிட்டனர்.
ஆனால், வீட்டிற்குத் திரும்பிய நாய் மனிதர்களைக் கண்டு பயந்து, வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருப்பதால் அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. “என் மகள் இருக்கும் இடத்தை இந்த நாய் காட்டும்” என்று கண்ணீருடன் நம்பும் தாயின் துயரம் பார்ப்போரை நெகிழ வைக்கிறது. நாய் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் அதன் உதவியுடன் தேடுதல் வேட்டையைத் தொடர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
