மத்திய பிரதேச மாநிலம் ரீவா மாவட்டத்தில் உள்ள கோவிந்த்கர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், சினிமா கதையையே மிஞ்சும் அளவிலான ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சதனா பகுதியைச் சேர்ந்த விபின் குமார் யாதவ் என்பவருக்கும், டீகர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், அந்தப் பெண்ணிற்குத் திருமணத்திற்கு முன்பே அதே கிராமத்தைச் சேர்ந்த சுனில் குஷ்வாஹா என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
கள்ளக்காதலன் சுனில், திட்டமிட்டு விபினுடன் பழகி அவனது நம்பிக்கையைப் பெற்று, அவனது வீட்டிலேயே தங்கியும் வந்துள்ளான். பின்னர் ஒருநாள், விபினை அவனது மாமனார் ஊரான டீகர் கிராமத்திற்கு அழைத்துச் சென்ற சுனில், தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து விபினைக் தந்திரமாகக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்துள்ளான்.
இக்கொடூரச் சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருக்க, மூன்று நாட்கள் கிணற்றிலேயே கிடந்த விபினின் சடலத்தைத் தோண்டி எடுத்து, பின்னர் தரையில் குழி தோண்டிப் புதைத்து மறைத்துள்ளனர்.
விபின் காணாமல் போனது குறித்து அவரது தந்தை கடந்த மார்ச் 26-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், விபினின் மனைவி மற்றும் சுனிலின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் கள்ளக்காதல் விவகாரத்தைக் கண்டுபிடித்தனர்.
மற்றொரு வழக்கில் சிக்கிய சுனிலைக் காவல் துறையினர் தங்களது பாணியில் விசாரித்தபோது, விபினைக் கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டான்.
குற்றவாளி காட்டிய இடத்தில் தோண்டிய போலீஸார், விபினின் எலும்புக்கூடு மற்றும் துணிகளை மீட்டெடுத்து உடற்கூறாய்விற்காகச் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
தற்பொழுது முதன்மைக் குற்றவாளி சுனில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டமிட்ட கொலையில் விபினின் மனைவியின் பின்னணி குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
