பெங்களூருவில் புதன்கிழமை இரவு பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சம்மனஹள்ளி மேம்பாலத்தில் வேகமாக சென்ற ஒரு எஸ்யூவி வாகனத்தின் அடியில் இருந்து தீப்பொறிகள் பறந்ததை கண்டு, அதனை தொடர்ந்து வந்த வாகன ஓட்டிகள் எச்சரிக்கை அளித்த போதிலும், அந்த வாகனம் சுமார் 500 மீட்டர் தூரம் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதியில் பீதி நிலவியது. இறுதியில் கோபமடைந்த பொதுமக்கள் எஸ்யூவியை நிறுத்தி, அதன் ஓட்டுநரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் ஸ்ரீனிவாஸ் கே.வி. என்பவர் அந்த எஸ்யூவியை ஓட்டிச் சென்றது தெரியவந்தது. அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியிருந்தது உறுதி செய்யப்பட்டது. துரத்திச் செல்லும் போது அவர் மற்றொரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் மோதியதாக போலீசார் தெரிவித்தனர். புகாரளித்த ரோஹித் எஸ். என்பவர் கூறுகையில், “எனது புல்லட் மோட்டார் சைக்கிளை அந்த எஸ்யூவி பின்னால் மோதியது.

பைக் எஸ்யூவியின் முன்புறத்தில் சிக்கிய நிலையில், அது சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதை நான் பார்த்தேன்” என்றார். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார். எனினும், அவரது இருசக்கர வாகனம் கடுமையாக சேதமடைந்தது. விசாரணையில், ஸ்ரீனிவாஸ் மது அருந்தியதை ஒப்புக்கொண்டதாகவும், மோதலுக்குப் பிறகு பீதியடைந்ததால் வாகனத்தை நிறுத்த முடியவில்லை என்றும், மோட்டார் சைக்கிள் தனது எஸ்யூவியில் சிக்கியிருந்தது தெரியவில்லை என்றும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை தாக்கியதுடன், எஸ்யூவியையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.