உத்தரப் பிரதேச மாநிலத்தில், வளர்ப்பு நாய் இறந்த சோகத்தில் பட்டதாரிகளான இரு சகோதரிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ மாவட்டம் தோதா கிராமத்தைச் சேர்ந்த ராதா சிங் (24), ஜியா சிங் (22) ஆகியோர் பெற்றோருடன் வசித்து வந்தனர். இவர்கள் சிறுவயது முதலே ‘டோனி’ என்ற பெயரில் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாயை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த நாயின் மீது இருவருக்கும் அளவுக்கடந்த பாசம் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்ட டோனி உயிரிழந்தது. இதனால் சகோதரிகள் இருவரும் கடும் மன வேதனையில் ஆழ்ந்தனர். நாளடைவில் அவர்கள் சமூகத்துடனும் உறவினர்களுடனும் தொடர்பை குறைத்து, தனிமையில் வாழத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இருவரும் பினாயில் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக அவர்கள் ராணி லட்சுமிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே ராதா உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சகோதரிகளின் தந்தை கைலாஷ் சிங் (65) கூறுகையில், “டோனி உயிருடன் இருந்தபோது அது உணவருந்தாத நாளில் என் மகள்களும் உணவருந்த மாட்டார்கள். நாய் இறந்த பிறகு, அவர்கள் தனி அறையில் தங்கத் தொடங்கி, யாரிடமும் பேசாமல், செல்போனும் பயன்படுத்தாமல் இருந்தனர். இதனால் அவர்களின் மனநிலை குறித்து எங்களுக்கு பெரும் கவலை ஏற்பட்டது.
மருத்துவமனைகளுக்கும், சில சமயங்களில் மந்திரவாதிகளிடமும் அழைத்துச் சென்றோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை” என்றார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. வளர்ப்பு நாய் மீது கொண்ட அளவுக்கடந்த பாசம் காரணமாக இரு இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
