அமெரிக்க குடியுரிமையுடைய ஒருவன் பெலீசில் உள்ள Tropic Air நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சிறிய விமானத்தை கடந்த வியாழக்கிழமை கடத்த முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியுடன் பயணித்த அவர், விமானம் மிட்எயரில் பறந்து கொண்டிருந்தபோது 14 பயணிகளுடன் கூடிய விமானத்தை கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றுள்ளார். இந்த நேரத்தில் அவர் மூன்று பயணிகளை கத்தியால் காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

விமானத்தை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்த முயன்ற அந்த நபர், விமானத்தை நாட்டைவிட்டுச் செல்ல வலியுறுத்தியதுடன், மேலும் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். எனினும், விமானம் எரிபொருள் குறைந்த நிலையில் சுற்றிச் சுற்றி, இறுதியில் மீண்டும் பெலீசுக்கு திரும்பி தரையிறக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், விமானத்தில் பயணித்திருந்த ஒருவர், சட்டப்பூர்வமான துப்பாக்கியுடன் இருந்தவர், அந்தக் கடத்தலை முறியடித்து அந்த நபரை சுட்டு வீழ்த்தியுள்ளார்.

கத்தியுடன் தாக்கிய நபர் கெலிஃபோர்னியாவைச் சேர்ந்த 49 வயதான அகின்யெலா சாவா டெய்லர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் பெலீசில் நுழைய முயற்சித்தபோது அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த வாரம் மீண்டும் நுழைந்து இந்த செயலுக்கு முயற்சி செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சுடப்பட்ட டெய்லர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டும், அங்கு வரும்போதே மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்தச் சம்பவத்தையடுத்து பெலீசில் உள்ள பிலிப் SW கோல்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.