நடிகர் விஜய்யின் கடைசிப் படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) தொடர்பான சட்டச் சிக்கல்களால் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நீடித்து வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்ததால், தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்சன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்திலும் சாதகமான தீர்ப்பு கிடைக்காததால், படக்குழுவினர் வழக்கை வாபஸ் பெற்று, படத்தைப் மறுதணிக்கைக்கு (Re-censoring) அனுப்பி வைத்தனர்.
தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காகப் படக்குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 9-ஆம் தேதி இதற்கான மறுஆய்வு நடைபெறவிருந்தது. ஆனால், தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, அந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, நாளை (மார்ச் 17) மறுஆய்வுக் குழுவினர் படத்தைப் பார்க்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை நாளை ஆய்வு நடைபெறாவிட்டால், மார்ச் 19-ஆம் தேதி ஆய்வு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
மறுஆய்வுக் குழுவின் பார்வைக்குப் பிறகு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே படம் திரைக்கு வரும். இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் சூழல் கருதி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் தேர்தலுக்குப் பின்னரே வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் படம் வெளியாகுமா அல்லது மீண்டும் புதிய சிக்கல்கள் எழப்போகிறதா என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
