சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 19 வயதுடைய இளம்பெண் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் பெண் காவலர் ஒருவர் ஓடி வந்து அந்த நபரை பிடித்தார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்த நபரை செருப்பால்  சரமாரியாக தாக்கியுள்ளார். உடனே பொதுமக்களும் திரண்டு வந்து அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து பெண் காவலர் அந்த நபரை ஆட்டோவில் ஏற்றி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் சேலம் அரிசி பாளையத்தைச் சேர்ந்த சண்முகநாதன் என்பது தெரியவந்தது. அவர் டவுன் பகுதியில் இருக்கும் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். மது போதையில் இருந்ததால் சண்முகநாதன் அத்துமீறியது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.