சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் மனைவிக்கும், அதே குடியிருப்பின் 4-வது மாடியில் குடியேறிய சங்கீதா என்பவரின் மகன் திலீப்பிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறிய நிலையில், திலீப் தனது பணத்தேவைக்காக அந்தப் பெண்ணிடமிருந்து சுமார் 850 கிராம் தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைப் பெற்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் கொடுத்த நகைகளைத் திருப்பி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திலீப் அவர்கள் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களைசமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த பெண்ணின் கணவர் நகைகளைத் திரும்பக் கேட்டபோது, திலீப்பும் அவரது தாயாரும் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகினர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திலீப் ஏற்கனவே விமான பணிப்பெண் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள திலீப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.