தோனி ஓய்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அது அவருடைய தனிப்பட்ட விஷயம் என்றும், அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்காமல் இருங்கள் என்றும் சிஎஸ்கே முன்னாள் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்..

இந்தியன் பிரீமியர் லீக் 2023 பதிப்பு எம்எஸ் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாக இருக்கும் என்று முன்னதாகவே அறிகுறிகள் இருந்தன. இந்த விஷயத்தில் தோனி தெளிவான முடிவை அறிவிக்கவில்லை என்றாலும், அவர் எப்போது ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் முரளி விஜயிடம், அந்த வீரரின் ஓய்வு குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, அவர் கடுமையாக பதிலளித்தார்.

ஓய்வு என்பது ஒரு வீரரின் தனிப்பட்ட விஷயம் என்றும், இதுபோன்ற கேள்விகளால் வீரர்களை வேட்டையாடாமல் தனியாக இருக்க வேண்டும். தோனி 15 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடிய வீரர் என்றும், அவருக்கு தேவையான தனியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் முரளி விஜய் கூறியதாவது, இந்த கேள்வியை நீங்கள் கேட்பது மிகவும் கடுமையானது. அது அவருடைய தனிப்பட்ட விஷயம். இந்த மாதிரியான சூழ்நிலை வரும்போது வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மக்களுக்குப் புரியவில்லை. 15 ஆண்டுகள் நாட்டுக்காக சேவையாற்றிய வீரர். எனவே இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்காமல், அவருக்குத் தேவையான இடத்தையும் நேரத்தையும் கொடுங்கள். இந்த கேள்விக்கு பதில் சொல்வது கடினம். எம்எஸ் எப்போது ஓய்வு பெறுகிறார் என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள்.

இதற்கு பதில் சொல்லவேண்டியது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் சமீபத்தில் ஓய்வு பெற்றேன். இந்த நிலையை நான் நன்கு அறிவேன். நாங்கள் இதயத்துடனும் ஆன்மாவுடனும் விளையாடுகிறோம். எனவே ஓய்வு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். எனவே வீரர்களுக்கு அவர்களின் தனியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன்,’ என்றார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றது. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த இன்று சேப்பாக்கில்   சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.