“முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும்” என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், நடந்து முடிந்த தேர்தலில் தோற்றுப்போன விரக்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகச் சாடினார். மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் திமுக இன்னும் தவித்து வருவதையே அவர்களின் செயல்பாடுகள் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

​மேலும் பேசிய அமைச்சர், தற்போதைய தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு கடந்த 40 நாட்களாகத் திரைமறைவில் மிகப்பாரிய சதி முயற்சிகள் நடந்து வருவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தவெக எம்.எல்.ஏ-க்கள் பலரையும் திமுகவினர் தொடர்ந்து தொடர்புகொண்டு, தலா 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசி இழுக்கப் பார்க்கிறார்கள் என்றும், இதனாலேயே ஒவ்வொரு மேடையிலும் தவெக ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் கவிழும் என ஸ்டாலின் சவால் விட்டுப் பேசி வருகிறார் என்றும் அம்பலப்படுத்தினார். இந்த கேவலமான குதிரை பேர அரசியலை ஸ்டாலின் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.