மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் உள்நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைச் சாதகமாகப் பயன்படுத்தி, பெங்களூருவில் உள்ள சில உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் ‘கேஸ் சார்ஜ்’ (Gas Charge) என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பெங்களூருவில் உள்ள ‘மிஸ்டர் ஆந்திரா மீல்ஸ்’ (Mr. Andhra Meals) உணவகத்திற்குச் சென்ற நரேஷ் குமார் என்ற வாடிக்கையாளர், ஒரு பிளைன் தோசை மற்றும் அரை பிளேட் சிக்கன் கறி ஆர்டர் செய்துள்ளார். சாப்பிட்டு முடித்த பின் அவருக்கு வழங்கப்பட்ட பில்லில், உணவின் விலையுடன் கூடுதலாக 30 ரூபாய் ‘கேஸ் சார்ஜ்’ எனச் சேர்க்கப்பட்டிருந்தது.
உணவக உரிமையாளர்கள் தங்களின் எரிபொருள் செலவையும் வாடிக்கையாளர்கள் தலையிலேயே சுமத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த பில்லின் புகைப்படத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். “உணவுக்கான விலையைத் தந்த பிறகும், அதனைச் சமைப்பதற்கான எரிவாயுவிற்கும் நாங்களே பணம் தர வேண்டுமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த எரிவாயு தட்டுப்பாடு உணவகங்களுடன் நிற்காமல், நகரில் உள்ள தங்கும் விடுதிகளையும் விட்டுவைக்கவில்லை. சில விடுதிகளில் எரிவாயு தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, உணவுப் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பல வகையான உணவுகளுக்குப் பதிலாக எளிமையான உணவுகளே வழங்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி வெளியே சாப்பிடச் செல்லும் மக்களிடம் உணவகங்கள் இத்தகைய கூடுதல் கட்டணத்தைக் கறக்கின்றன.
உணவகங்களின் இந்த கட்டண வசூல் குறித்து பெங்களூரு மாநகரக் காவல்துறையிடம் புகாரளித்துள்ள நரேஷ் குமார், இத்தகைய பகல் கொள்ளையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் சந்தையில் நிலவும் தற்காலிகத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி பொதுமக்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கும் உணவகங்களின் செயல் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
