தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது மனைவி சௌமியா அன்புமணியைக் களமிறக்க அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தர்மபுரி நாடாளுமன்றத் தேர்தலில் சௌமியா பெற்ற கணிசமான வாக்குகளை மனதில் வைத்து இந்த மூவ் எடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், இதற்குப் போட்டியாகத் தனது மகள் காந்திமதியையே அதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்த டாக்டர் ராமதாஸ் காய் நகர்த்தி வருவதுதான் இப்போதைய ஹைலைட்.
“மகனுக்கே அந்தத் தொகுதி என்றால், என் மகளுக்கும் அங்கு உரிமை இருக்கிறது” என்ற ரீதியில் ராமதாஸ் தரப்பு செயல்பட்டு வருவதால், தைலாபுரத் தோட்டத்தில் ‘மருமகள் Vs மகள்’ என்ற நேரடி யுத்தம் வெடிக்கப் போவதாகப் பேச்சு கிளம்பியுள்ளது. அரசியல் ரீதியாகப் பார்த்தால், அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டுத் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார். ஆனால், டாக்டர் ராமதாஸோ, “நான்தான் கட்சியின் நிறுவனர், என்னைக் கேட்காமல் கூட்டணி வைக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை” எனச் சொல்லி சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிப்ரவரி 2, 2026 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், தன்னுடையதுதான் உண்மையான பாமக என்று அன்புமணி வாதிட்டுள்ளார். இப்படித் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான கூட்டணி மோதல் ஒருபுறம் இருக்க, இப்போது வீட்டுப் பெண்களையும் அரசியலில் நேருக்கு நேர் மோத விடுவது பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாப்பிரெட்டிபட்டி தொகுதி யாருக்கு என்பதை விட, ‘மாம்பழம்’ சின்னம் யாருக்கு என்பதே இப்போதைய பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.
