தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் எழுச்சியுடன் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோருக்காக இந்தப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மனு விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் அலைகடலெனத் திரண்டு வந்து ஆர்வத்துடன் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.

இந்த எழுச்சியானது தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கான முன்னோட்டம் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விருப்ப மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல, தமிழக மக்களின் கனவுகளை நனவாக்கப் போகும் மாற்றத்திற்கான உறுதிமொழிப் பத்திரங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் களம் இப்போதே சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறிய அவர், பொதுமக்களின் பேராதரவு கட்சிக்குக் கூடுதல் வலிமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 14-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகம் நடைபெறும் நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் பாதுகாப்பு கருதியும் தேவையான ஏற்பாடுகள் தலைமையகத்தில் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைப் படைக்கப் போவதாகத் தொண்டர்கள் உற்சாகத்துடன் முழக்கமிட்டு வருகின்றனர்.