“தேவி” ஸ்மிருதி மந்தனாவுக்காக, சீன ரசிகர் பெய்ஜிங்கில் இருந்து ஹாங்சோவுக்கு பயணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது தெரிந்ததே. சில ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்க்க அதிக முயற்சி செய்வார்கள். அந்தவகையில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில்  அப்படி ஒரு சம்பவம் நடந்தது. அதுவும் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிரபலமல்லாத சீன மண்ணில். ஆம்.. ஆசிய விளையாட்டு போட்டியில் இறுதி போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனாவை பார்க்க சீன ரசிகர் ஒருவர் 1,200 கிலோமீட்டர் பயணம் செய்தார். அதற்காக 1000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 11,400) செலவு செய்தார். ஸ்மிருதிக்கு இந்திய ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். தற்போது இந்தியாவை தாண்டியும் ரசிகர்கள் இருப்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.

அவர் பெயர் வெய் ஜுன்யு. ஸ்மிருதி மந்தனா விளையாடுவதைப் பார்க்க பெய்ஜிங்கில் இருந்து ஹாங்சோவுக்கு வந்ததாக அவர் கூறினார்.“நான் ஒரு கிரிக்கெட் வீரராக ஸ்மிருதி மந்தனாவை நேசிக்கிறேன். அவர்  ஒரு சூப்பர் கிரிக்கெட் வீரர். அவள் விளையாடுவதை நேரடியாக பார்க்கவே இங்கு வந்ததாக கூறினார். மேலும், இறுதிப் போட்டியின் போது, ​​’மந்தனா தி தேவி’ என்ற வாசக அட்டையை ஜுன் கையில் வைத்திருந்தார். இதனால் அவரது புகைப்படங்கள் சில நொடிகளில் வைரலானது. ஜுன்யுவின் புகைப்படத்தைப் பார்த்த பலரும் ‘எல்லா எல்லைகளையும் தாண்டிய ரசிகை’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

கிரிக்கெட் பற்றி கொஞ்சம் தெரியும் :

முக்கியமான விஷயம் என்னவென்றால்… வெய் ஜுன்யுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது. ஆனால், அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவருக்கு பிடித்த வீரர்கள் யார் தெரியுமா? சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருடன் ஸ்மிருதி மந்தனாவின் விளையாட்டையும் விரும்புகிறார். 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சைப் பார்த்தேன். அன்றிலிருந்து தான் ரசிகனாக மாறிவிட்டதாக ஜுன்யு கூறினார். மேலும், பெய்ஜிங்கில் தான் படித்த பல்கலைக்கழகத்தில் கிரிக்கெட் பாடம் சொல்லிக் கொடுப்பதாகவும், அதனால் இந்த விளையாட்டைப் பற்றி தனக்கு கொஞ்சம் தெரியும் என்றும் அவர் கூறினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாறு படைத்தது. இந்தப் போட்டியில் முதல்முறையாக  தங்கப் பதக்கத்தை வென்றது. இலங்கைக்கு எதிரான சாம்பியன் பட்டப் போட்டியில் மந்தனா (46), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (42) சிறப்பாக ஆடினர். இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி இந்திய பந்துவீச்சாளர்களால் 97 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.