அசாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் அரங்கேறியுள்ள இந்தத் திடீர் கட்சித் தாவல் அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடந்த மாதம் அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகாவில் இணைந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத நிலையில், தற்போது மேலும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முக்கியத் தலைவர்களைத் தன்வசம் இழுப்பதன் மூலம், மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜக காய் நகர்த்தி வருகிறது. மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸின் முக்கியத் தூண்கள் சரிந்து வருவது, அக்கட்சியின் தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.