தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் பிரச்சாரக் கூட்டம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் கிளப்பி வருகிறது. அதாவது நடிகர் விஜய் வருகையின்போது மின்சாரம் தடை செய்யப்பட்டது ஏன் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் நிலையில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கூறுகின்றனர். தமிழக வெற்றி கழகமும் மாநில அரசின் விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியதோடு சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கரூர் விவகாரத்தில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. நியாயமான முறையில் விசாரணை செய்து உண்மையை கண்டறிய வேண்டும். கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். உடற் கூராய்வை அவசரமாக நடத்தியது ஏன்.? கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். மேலும் நீதி மன்றம் ஒரு விசாரணை கமிஷனை அமைத்து உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.