கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தர மத்திய அரசு மறுக்கிறது. இந்த நிதியை வழங்க வேண்டும் என ஒன்றிய பிரதமர் மோடிக்கு முதல்வர் என்ற முறையில் கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கு மத்திய கல்வி அமைச்சர் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று பதில் கடிதம் எழுதியுள்ளார். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா நாங்களா? மும்மொழி கொள்கையை திணிப்பது அரசியல் இல்லையா? பழமொழி பேசக்கூடிய இந்தியாவில் ஒரு முறை கொள்கை என்பது அரசியல் கிடையாதா? ஒரு திட்டத்திற்கான நிதியை வழங்குவதற்கு நிபந்தனை விதித்து நிர்ப்பந்திப்பது அரசியல் கிடையாதா?.

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை தமிழகம் ஏற்காததால் ஐந்தாயிரம் கோடியை இழக்கிறது என்று சொல்லும் ஒன்றிய அமைச்சருக்கு தமிழகத்திலிருந்து நீங்கள் வாங்கிக் கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்வதற்கு எங்களுக்கு ஒரு நொடி போதும். ஆனால் கொடுத்து பெறுவது தான் எங்கள் கூட்டாட்சியின் தத்துவம். அதுதான் இந்தியாவின் நல்லெண்ணத்திற்கு அடையாளம். ஒன்றிய அரசுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறேன், தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள், தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.