தெருநாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மேனகா காந்தியின் சமீபத்திய கருத்துக்கள் மற்றும் அவரது ‘உடல்மொழி’ நீதிமன்ற அவமதிப்புக்கு சமமானது என்று சுட்டிக்காட்டியது.
இது குறிப்பாக, ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பேசிய விதம் மற்றும் நீதிபதிகளின் கருத்துக்களை அவர் விமர்சித்த விதம் குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள், “அவரது உடல்மொழியை கவனித்தீர்களா? அவர் என்ன சொல்கிறார், எப்படி சொல்கிறார் என்பதைப் பார்த்தீர்களா?” என மேனகா காந்தியின் வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரனிடம் கேள்வி எழுப்பினர்.
நீதிமன்றத்தின் பெருந்தன்மை காரணமாகவே அவர் மீது இதுவரை அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இந்த விசாரணையின் போது, மேனகா காந்தியின் வழக்கறிஞர் தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்காகக் கூட ஆஜரானவர் என்று குறிப்பிட்டபோது, “அஜ்மல் கசாப் கூட நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை, ஆனால் உங்கள் தரப்பினர் அதைச் செய்துள்ளார்” என்று நீதிபதி விக்ரம் நாத் காட்டமாகப் பதிலளித்தார்.
மேலும், தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களே அவற்றின் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முந்தைய கருத்து கிண்டலாகக் கூறப்பட்டது அல்ல, அது மிகவும் தீவிரமான ஒன்று என்றும் நீதிபதிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர். ஒரு முன்னாள் அமைச்சராகவும், விலங்குகள் நல ஆர்வலராகவும் இருந்தும் தெருநாய் பிரச்சனைக்குத் தீர்வு காண அவர் மேற்கொண்ட நிதி ஒதுக்கீடுகள் அல்லது திட்டங்கள் என்னவென்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
