உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக வலைதள மோகத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ரிலீஸ் செய்வதில் அதீத ஆர்வம் கொண்ட ஒரு பெண், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து அவரது நாவைக் கடித்துத் துண்டித்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குடும்ப உறவுகளுக்குள் சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் விரிசலை உணர்த்துகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கணவரின் தாய் தனது மருமகள் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். தனது மருமகள் ரீல்ஸ் எடுப்பதற்கு அடிமையாக இருந்தது மட்டுமின்றி, மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்களையும் கொண்டிருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் போதைப் பழக்கங்கள் எவ்வாறு ஒருவரது நிதானத்தை இழக்கச் செய்து, கொடூரமான குற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.
