சிவகங்கை நகராட்சிப் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் தெருநாய் கடியால் சிரமப்படுவ தாகவும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் தேர்தல் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வட்டாட்சியரை ஒரு தெருநாய் துரத்திச் சென்று கடித்துவிட்டது. இதில் காயமடைந்த வட்டாட்சியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் பொற்கொடி, உடனடியாக நகர் பகுதியில் ஆய்வு செய்யச் சென்றார்.
அப்போது, அவர் நகராட்சி ஆணையரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் போனை எடுக்கவில்லை. இதனால், கலெக்டரே நேரடியாகப் பல்வேறு தெருக்களுக்குச் சென்று, தெருநாய்கள் பிரச்சினையின் தீவிரத்தை ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக, தெருநாய்கள் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மீது ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது? எனக் கேட்டு, நகராட்சி ஆணையர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் அவர் உத்தரவிட்டுள்ளார்.
