“கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்கிறேன் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தீர்களே, ரிசர்வ் வங்கியின் சட்டத்திட்டங்கள் உங்களுக்குத் தெரியாதா? தெரிந்து கொண்டே மக்களை ஏமாற்றினீர்களா?” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வாசுதேவநல்லூர் பொதுக்கூட்டத்தில் புதிய தவெக அரசை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகளுக்குக் கூட்டுறவு கடன்களைத் தள்ளுபடி செய்வதாகத் தேர்தல் நேரத்தில் தவெக வாக்குறுதி அளித்த நிலையில், அதற்கு முன்பே ரிசர்வ் வங்கி இதற்கான சட்டத்திட்டங்களையும், வழிவகைகளையும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தது அவர்களுக்குத் தெரியாதா என அவர் சாடினார். திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரித்தபோது, இதே வாக்குறுதியைச் சேர்க்கப் பலர் வலியுறுத்தியும், செய்யக்கூடியவற்றை மட்டுமே வாக்குறுதியாகக் கொடுக்க வேண்டும் என அன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் என்று கனிமொழி குறிப்பிட்டார்.
தேர்தல் வருகிறது, வாக்கு வாங்கிவிடலாம் என்று தெரிந்துகொண்டே மக்களை ஏமாற்றும் எந்த வாக்குறுதியையும் எழுதக்கூடாது எனத் தங்கள் தலைவர் கட்டளையிட்டதாகக் கூறிய அவர், இன்று ஆட்சிக்கு வந்துவிட்டு, ‘ரிசர்வ் வங்கி சட்டம் தடையாக இருக்கிறது, நிதிநிலை சரியில்லை’ என்று காரணங்களைக் கூறி ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது என்று அதிரடியாக எச்சரித்துள்ளார்.
