தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே சுந்தர் நகர் 1 தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் 91 வயதான கந்தசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் நிஷாந்தின் வீட்டு காம்பவுண்டு அருகே வாழைமரம் வளர்த்த நிலையில் அந்த வாழைமரம் காய்ந்து இலைகள் நிஷாந்த் வீட்டிற்குள் விழுந்துள்ளது.

இதனால் நிஷாந்த் முதியவரிடம் காய்ந்த கிளைகளை அகற்றுமாறு கூறியுள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் வளர்ந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் நிஷாந்தின் மனைவி சிந்துஜா (30) தன் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கந்தசாமி கையில் அரிவாளோடு வந்த நிலையில் அந்த பெண்ணை பின்னால் நின்று வெட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக அவரிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் அந்த முதியவர் விரட்டி விரட்டி அரிவாளால் அந்த பெண்ணை வெட்டினார்.

அந்த முதியவர் எதற்காக வாழை மரத்தின் இலைகளை வெட்டினாய் என கேட்டுக் கொண்டே அந்த பெண்ணை வெட்டினார். இதில் அந்தப் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் முதியவர் வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டார். இதில் காயமடைந்த சிந்துஜா போது தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.