தேசிய தேர்வு முகமை வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகளில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஆர்யன் குப்தா 720-க்கு 715 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஆரம்பத்தில் வினாத்தாள் கசிவு புகாரால் மே மாதம் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டபோது அவர் மிகவும் மனமுடைந்தார்.

இருப்பினும், சற்றும் மனம் தளராமல் தனது கடின உழைப்பைத் தொடர்ந்த ஆர்யன், ஜூன் 21 அன்று நடத்தப்பட்ட மறுதேர்வில் இந்த இமாலய வெற்றியைப் பெற்றுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த பன்ஷுல் பன்சால் என்பவருடன் இணைந்து இவர் நாட்டின் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

“>

ஆர்யன் குப்தாவின் இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னால் ஒரு உருக்கமான லட்சியமும், தனிப்பட்ட இழப்பும் ஒளிந்துள்ளது. அவர் 3-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, அவரது பாட்டி 4-ஆம் கட்டப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

ஆர்யனின் தந்தை டாக்டர் சச்சின் குப்தா ஒரு மயக்க மருந்து நிபுணர், தாய் டாக்டர் ரீனா குப்தா ஒரு மகப்பேறு மருத்துவர் என ஒட்டுமொத்த குடும்பமுமே மருத்துவர்களாக இருந்தபோதிலும், அவசரகாலத்தில் அவர்களால் பாட்டியைக் காப்பாற்ற இயலவில்லை. இந்தத் துயரச் சம்பவமே ஆர்யனின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, பிற்காலத்தில் ஒரு சிறந்த புற்றுநோய் நிபுணராக மாறி, இந்த கொடிய நோய்க்கு எதிராகப் போராட வேண்டும் என்ற கனவை விதைத்தது.

தனது இலக்கை அடைய ஆர்யன் குப்தா தினமும் 16 முதல் 17 மணி நேரம் வரை அயராது படித்துள்ளார். பல இரவுகள் தூக்கமின்றி கடுமையான அழுத்தங்களுக்கு இடையே உழைத்ததாகக் கூறும் ஆர்யன், இந்தத் தேர்வு ஒரு ஆரம்பப் புள்ளி மட்டுமே என்றும், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான தனது உண்மையான பயணத்தை இனிமேல்தான் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆர்யனின் மூத்த சகோதரர் நீட் தேர்வில் 54-வது ரேங்க் பெற்று தற்போது எம்பிபிஎஸ் படித்து வரும் நிலையில், அவரைப் பார்த்து ஈர்க்கப்பட்ட ஆர்யன் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். வருங்காலத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, “ஆசிரியர்களை முழுமையாக நம்புங்கள், சாக்குப்போக்கு தேடாமல் ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து உழையுங்கள்” என்று ஆர்யன் அறிவுரை வழங்கியுள்ளார்.