கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அச்சுதன். இவரது மகன் அஜிஸ் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரவீனா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பிரவீனாவுக்கு ஜிஜேஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் மதியம் ஜிஜேஷ் பிரவீனாவின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அச்சுதனிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். அவர் தண்ணீர் எடுக்க சென்றபோது ஜிஜேஷ் வீட்டுக்கு பின்புறம் நின்று கொண்டிருந்த பிரவீனாவின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தார். அதுமட்டுமில்லாமல் ஜிஜேஷ் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வலியில் அலறி துடித்தார்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.