அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஈரானிய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது லாரி மோதியதில் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, ஈரான் அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் நடந்து வரும் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, லாஸ் ஏஞ்சல்ஸின் வெஸ்ட்வுட் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். அப்போது அங்கு வந்த ‘யு-ஹால்’ (U-Haul) ரக லாரியை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர்.
திடீரென அந்த லாரியின் ஓட்டுநர் வாகனத்தை வேகமாக முன்னேக்கிச் செலுத்தியதில், சாலையில் நின்றிருந்த போராட்டக்காரர்கள் மீது லாரி மோதியது. இதில் பலர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், லாரி ஓட்டுநரைத் தாக்க முயன்றனர். உடனே தலையிட்ட போலீஸார், ஓட்டுநரை மீட்டு கைது செய்தனர். அந்த லாரியில் ஈரான் மற்றும் அமெரிக்க அரசியலுக்கு எதிரான பதாகைகள் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
🚨#BREAKING: Watch as chaos erupts after Uhal truck plows through a massive Iran, protest with multiple people reportedly struck ⁰⁰📌#LosAngeles | #Californa ⁰⁰Watch as a U-Haul truck drove into thousands of demonstrators on Veterans Avenue in Los Angeles during an… pic.twitter.com/IGnEjOOpSP
— R A W S A L E R T S (@rawsalerts) January 12, 2026
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புளோரிடாவிலிருந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது: “ஈரானில் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவது குறித்த தகவல்கள் வருகின்றன. வன்முறை மூலம் ஆட்சி செய்யும் இவர்களைத் தலைவர்கள் என்று சொல்வதை விட வன்முறையாளர்கள் என்றே அழைக்க வேண்டும். ஈரானின் நிலையை அமெரிக்கா மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அந்நாட்டு அரசுக்கு எதிராக சில வலுவான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை விரைவில் அறிவிப்போம்.” என டிரம்ப் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக ஈரானின் பல்வேறு நகரங்களில் டிசம்பர் மாத இறுதியில் இருந்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருப்பதாக ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை ஈரானின் நகர்வுகளை ஒவ்வொரு மணி நேரமும் கண்காணித்து வருவதாக அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
