ஓமன் கடற்கரைக்கு அப்பால் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ‘எம்.டி. செட்டபெல்லோ’ என்ற வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே, 16 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையில் இக்கோர விபத்து முக்கியப் புள்ளியாக விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது, இந்திய மாலுமிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முதன்மையான முன்னுரிமை என்பதை திட்டவட்டமாக அறிவித்த பிரதமர் மோடி, அமெரிக்கா-ஈரான் இடையே அமையவுள்ள அமைதி ஒப்பந்தத்தில் மாலுமிகளின் பாதுகாப்பு விதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இருப்பினும், இச்சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் எவ்வித இரங்கலையோ அல்லது வருத்தத்தையோ தெரிவிக்காமல், “நான் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், இது எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் அவர்கள் அனைவரையும் நேசிக்கிறோம், அவர்கள் மிகவும் நல்ல மனிதர்கள்” என்றார்.
அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதோடு, மூன்று நாட்களுக்குள் இரண்டு முறை அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸை நேரில் வரவழைத்து இந்தியா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
