
போபாலில் சிறுமி ஒருவரை ஆன்லைனில் நட்பு வைத்த இளைஞர் பாலியல் வன்முறை செய்து கர்ப்பமாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. அதாவது வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, பரிசோதனையின் போது கர்ப்பம் உறுதி செய்யப்பட்டதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி, போலீசாரிடம் கூறியதாவது, “அஜய் என்ற இளைஞரை இன்ஸ்டாகிராமில் சந்தித்தேன். சில நாட்களாக ஆன்லைனில் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் எங்களுடைய மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டு தொடர்ந்து பேசத் தொடங்கினோம். ஒருநாள் அஜய் என்னை பிப்லானியில் சந்திக்க அழைத்தார். அங்கு சென்றபோது, அவர் தனது அறைக்கு அழைத்து சென்று எனை பாலியல் வன்முறை செய்தார்” என தெரிவித்துள்ளார்.
பிப்லானி போலீஸ் நிலைய இன்-சார்ஜ் அனுராக் லா கூறியதாவது, “சிறுமி பாக்ஸேவனியா பகுதியைச் சேர்ந்தவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பாக்ஸேவனியா போலீஸ் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டு, பின்னர் வழக்கு பிப்லானி போலீசாரிடம் மாற்றப்பட்டது” எனத் தெரிவித்தார். தற்போது, பெண் சிறுமியை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொறியியல் மாணவர் அஜயைக் கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.