ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த மாநில அரசு பேருந்து சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் புழல் சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென பேருந்தின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்ததும் பேருந்து டிரைவர் உமர் சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தினார்.

சிறிது நேரத்தில் பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.