உலக கிரிக்கெட் வட்டாரமே வியந்து பார்க்கும் வகையில், இந்திய அணியின் 15 வயது இளம் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷியின் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஜஸ்பிரித் பும்ரா, பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த இந்த இளம் புயல், தற்போது இந்திய சீனியர் அணியிலும் கால்பதித்துள்ளார். இந்நிலையில், வைபவ் சூரியவன்ஷியுடன் நிழல் போல் பயணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், இந்த சிறுவனின் கிரிக்கெட் வெறியைப் பற்றி ஒரு நெகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அதாவது “அண்டர்-19 உலகக்கோப்பை முடிந்தவுடன் வைபவ் ஓய்வெடுப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் அடுத்த நாளே வந்துவிட்டார். சாப்பிட்டு முடித்ததும், ‘சார்.. பிட்ச்சுக்கு போகலாம்’ என்றார். இரண்டு மூன்று நாட்கள் ஓய்வெடுக்குமாறு நாங்கள் கூறியும் கேட்காமல், ‘சார்.. ஒரு அரை மணி நேரம் மட்டும் விளையாட விடுங்கள்’ என்று பேட்டை தூக்கிக்கொண்டு பயிற்சிக்கு கிளம்பிவிட்டார். தீபாவளி பண்டிகையின் போது கூட அவர் சமஸ்திபூரில் உள்ள தன் குடும்பத்துடன் இருக்காமல், மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி செய்துகொண்டிருந்தார்” என ரோமி பிந்தர் வியப்புடன் தெரிவித்துள்ளார்.
வைபவ் தனது 9 ஆவது வயதிலேயே கிரிக்கெட்டிற்கான முறையான பயிற்சியைத் தொடங்கினார். மகனின் திறமையை உணர்ந்த அவரது தந்தை, அவருக்கு முழு ஆதரவையும் வழங்கினார். ஆரம்பத்தில் உள்ளூர் போட்டிகளில் தனது ஆக்ரோஷமான பேட்டிங் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வைபவ், பின்னர் பீகார் மாநில அணிக்காக விளையாடி பல பெரிய இன்னிங்ஸ்களை ஆடினார். இதன் மூலம் இந்திய அண்டர்-19 அணியில் தேர்வாகி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெறும் 57 பந்துகளில் சதம் விளாசி ஒரே இரவில் உலகப் புகழ்பெற்றார்.
இந்த அசாத்திய திறமையைக் கண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரைத் தன் அணியில் சேர்த்தது. ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ அணிக்கு எதிராக 38 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அதிரடி காட்டிய வைபவ், ஒட்டுமொத்த சீசனிலும் 776 ரன்கள் குவித்து ‘ஆரஞ்சு தொப்பியை’ வென்று சாதனை படைத்தார். இந்த அசுரத்தனமான ஃபார்ம் காரணமாக தற்போது இந்திய சீனியர் அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளதுடன், விரைவில் அவர் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
