பிரபல மலையாள நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நவாஸ்  திடீர் மரணமடைந்தது திரையுலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயது 51. மிமிக்ரி கலைஞராக ஆரம்பித்த அவரது பயணம், பின்னணிப் பாடகர், நடிகர் என பல துறைகளில் தன்னை நிரூபித்த பன்முகத்திறனாளி என அனைவராலும் அறியப்படுகிறார்.

1995-ம் ஆண்டு “சைதன்யம்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நவாஸ், அதனைத் தொடர்ந்து மிமிக்ஸ் ஆக்ஷன் 500, ஹிட்லர் பிரதர்ஸ், ஜூனியர் மாண்ட்ரேக், தில்லானா தில்லானா போன்ற திரைப்படங்கள் மற்றும் பல சீரியல்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து தனக்கென ஒரு தனித்திறனை உருவாக்கினார்.

திரைப்படங்களுடன் இணைந்து, பல மேடை நிகழ்ச்சிகளிலும் கலாபவன் நவாஸ் பங்கேற்று வந்தார். சமீபத்தில், “பிரகம்பனம்” என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக, கொச்சி அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

நேற்று மாலை படக்குழுவினர் வெளியில் செல்ல திட்டமிட்டிருந்த போது, நவாஸ் அவரது அறையில் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த படக்குழுவினர் அவரை அறையில் சென்று பார்த்த போது, அவர் உயிரற்ற நிலையில் கிடந்ததை கண்டனர்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, நவாஸை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவரை ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். மாரடைப்பு காரணமாக அவருடைய மரணம் நடந்திருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற உள்ளதாகவும், போலீசார் விபத்து மற்றும் மரணத்தின் சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நவாஸின் திடீர் மரணம், மலையாள திரையுலகில் அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலைஞர் சங்கங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.