சமூக வலைதளங்களில் தற்போது ஒரு மணப்பெண் தனது திருமண மண்டபத்தில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை செய்யும் புகைப்படம் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயல் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனரான கௌரி அகர்வால், தனது திருமணச் சடங்குகள் முடிந்த அடுத்த 10 நிமிடங்களிலேயே மென்பொருளில் ஏற்பட்ட ஒரு முக்கியமான பிழையை சரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.

இந்தத் தருணத்தை அவரது சகோதரரும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான மெகுல் அகர்வால் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை நடத்துவது எளிதானது அல்ல என்றும், அதற்கு இத்தகைய அர்ப்பணிப்பு தேவை என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இருப்பினும், இந்த புகைப்படம் இணையவாசிகள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

“>

ஒரு தரப்பினர் மணப்பெண்ணின் பணி பக்தியைப் பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் ஒருவரது திருமண நாளில்கூட வேலையில் இருந்து விடுப்பு எடுக்க முடியாத அளவுக்கு இருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரம் மிகவும் மோசமானது என்று சாடி வருகின்றனர். திருமண மண்டபத்தில் கூட வேலை செய்வதை “வெற்றி” என்று கொண்டாடுவது தவறான முன்னுதாரணம் என கூறுகின்றன.

இந்நிலையில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் செயல் என்றும் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். மணமகள் தனது முக்கியமான தருணத்தைக்கூட முழுமையாக அனுபவிக்கவிடாமல் வேலை செய்ய வைத்தது நிர்வாகத்தின் தோல்வியையே காட்டுகிறது என சமூக வலைதளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது.