
திருமணம், வாரிசுரிமை, விவாகரத்து உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பதே பொது சிவில் சட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த சட்டத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது. அந்த சட்டத்தின் படி லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் திருமணமாகாமல் சேர்ந்து வாழும் நபர்கள் தங்களது உறவு குறித்து பதிவு செய்ய வேண்டும்.
திருமணம், விவாகரத்து லிப்-இன் உறவு, அந்த உறவு முறிவு ஆகியவற்றை அரசிடம் பதிவு செய்வது பொது சிவில் சட்டத்தின்படி கட்டாயம். இந்த நிலையில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்ய தவறினாலோ அல்லது தவறான தகவல்களை வழங்கினாலோ மூன்று மாதங்கள் ஜெயில் தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு மாதம் தாமதம் ஏற்பட்டால் கூட மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை அனுபவிக்க கூடும்.
இந்த நிலையில் பொது சிவில் சட்டம் என்பது தனி உரிமையை பறிப்பதாக கூறி உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 17ஆம் தேதி நீதிபதி ஜி நரேந்தர் நீதிபதி அலோக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீங்கள் ஒரு சமூகத்தில் வாழ்கிறீர்கள். தொலைதூரக் காட்டில் உள்ள ஒரு குகையில் அல்ல. அண்டை வீட்டார் முதல் மொத்த சமூகத்தினரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்ளாமல் வெளிப்படையாக வாழ்கிறீர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அரசிடம் பதிவு செய்வது மட்டும் எப்படி தனி உரிமை மீறலாகும்? மாநில அரசு நேரடி உறவுகளை தடை செய்யவில்லை. மாறாக அவற்றை பதிவு செய்வதற்கு மட்டுமே உத்தரவிடுகிறது என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.