
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சின்ன புனல் வாசலை சேர்ந்த அழகுவேல் என்பவருடைய மகன் பிரதீஷ் குமார். இன்ஜினியர் ஆன இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த வேலு மகள் கவியரசி என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கவியரசி பயோ மெடிக்கல் படித்திருந்த நிலையில் தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில் கவியரசிக்கும் கணவர் வீட்டில் உள்ளவர்களுக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்ட கவியரசி நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவைத் தட்டி பார்த்தபோது திறக்கவில்லை. உடனே கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் கவியரசி பிணமாக கடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கவியரசி தாய் அருந்ததி போலீசாரிடம் என்னுடைய மகளிடம் பிரதிஷ்குமார், அவருடைய தாய் தங்கமணி மற்றும் நாத்தனார் பிரதீபா ஆகிய மூன்று பேரும் வரதட்சனை கேட்டு சித்திரவதை செய்ததால் எனது மகள் உயிரை மாய்த்துக் கொண்டார் என தெரிவித்துள்ளார். அவர்கள் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். திருமணம் ஆகி ஆறு மாதத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.