உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி, காவல்துறையினரிடம் தனது குடும்பத்தினரை துன்புறுத்த வேண்டாம் என வலியுறுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹசன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்ஹாபூர் மில்க் கிராமத்தைச் சேர்ந்த மனிஷா (18) என்ற இளம்பெண், தனது காதலன் ரூப்சந்தை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். இதையடுத்து, அவர் தனது காதலனுடன் சேர்ந்து பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மனிஷா, “நான் ஒரு மேஜர். என் விருப்பத்தின் பேரிலேயே ரூப்சந்துடன் சென்றேன். அவன் என்னை கட்டாயப்படுத்தவில்லை. போலீஸ் அதிகாரிகள் எங்கள் குடும்பத்தினரை துன்புறுத்த வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “எனக்கு 18 வயது. நல்லது–கெட்டது என்னவென்று புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன். நான் என் காதலன் ரூப்சந்தை திருமணம் செய்துள்ளேன். முதலில் அவன் என்னுடன் வர மறுத்தான். ஆனால் அவன் வரவில்லை என்றால் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கூறிய பிறகே அவன் சம்மதித்தான்” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “திருமணத்திற்கு 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பதால், அந்தச் செலவைத் தவிர்க்க இறந்துவிடுங்கள் அல்லது வீட்டை விட்டு ஓடிவிடுங்கள் என என் தாய் கூறினார்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கணவர் ரூப்சந்தின் குடும்பத்தினருக்கு இந்தத் திருமணம் குறித்து தகவல் இல்லாத நிலையில், அவர்களை தேவையில்லாமல் காவல்துறை தொந்தரவு செய்ய வேண்டாம் என ஹசன்பூர் போலீசாரிடம் மனிஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, தனது குடும்பத்தினரால் தனக்கும் தனது கணவருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, ஹசன்பூர் காவல் நிலையத்தில் மனிஷா பாதுகாப்பு கோரியுள்ளார். தங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு தனது பெற்றோர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

வைரலான வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பதியினரை தொடர்பு கொள்ளவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.