சிவகங்கை: திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பின்னணியில் ஏற்பட்ட சர்ச்சைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, லட்டு விவகாரத்தை தேசிய பிரச்சினையாக மாற்றுவது தேவையற்றது என்று அவர் கூறினார். “லட்டுவை சாப்பிட்டவர்கள் உயிருடன் தானே இருக்கிறார்கள்; அதில் பிரச்சினை இல்லை” என்றார்.

இதேவேளை, லட்டுவில் கலப்படம் இடம்பெற்றது தவறாகவே இருக்கலாம் என்றும், இந்த தவறை புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். லட்டு தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனம் மற்றும் அவர்களுக்கு ஒப்பந்தம் அளித்தவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.

அதனை விடுத்து, இந்த விவகாரத்தை நாட்டின் முக்கிய பிரச்சினையாக மாற்றக் கூடாது என்றும், ஆட்சியாளர்களால் ஏற்கனவே பல்வேறு முக்கிய பிரச்சினைகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சீமான் தெரிவித்தார்.