வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை திருடர்களிடமிருந்து பாதுகாக்க பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ‘பாதுகாப்பு குறிப்பு’ (Security Hack), தற்போது அவருக்கே வினையாக முடிந்துள்ளது.

இந்தியர்கள் பொதுவாகவே எந்த ஒரு சிக்கலுக்கும் மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். அந்த வகையில், @shiprarai2000 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவர், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது நகைகளை எப்படிப் பாதுகாப்பாக வைப்பது என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shipra Rai (@shiprarai2000)

அந்த வீடியோவில், அந்தப் பெண் தனது விலை உயர்ந்த நகைகள், பணம், கைக்கடிகாரம் மற்றும் வீட்டின் சாவி ஆகியவற்றை ஒரு பாலிதீன் பையில் வைக்கிறார். பின்னர், ஒரு துணி மாட்டும் ஹேங்கரின் (Hanger) நடுவில் அந்தப் பையை வைத்து, அதற்கு மேல் ஒரு டி-சர்ட்டை மாட்டி மறைக்கிறார். இறுதியாக, அந்த ஹேங்கரைச் சுவரில் உள்ள ஒரு சாதாரண கொக்கியில் தொங்கவிட்டுவிட்டு, “இதுதான் உலகிலேயே பாதுகாப்பான இடம்” என்பது போலக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டுகிறார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் அப்பாவித்தனத்தைப் பார்த்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.  “இந்த யோசனையை வீடியோவாகப் போட்டு திருடர்களுக்கே சொல்லிக் கொடுத்துவிட்டீர்களே… இனி திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் பீரோவைத் தேட மாட்டார்கள், முதலில் சுவரில் தொங்கும் டி-சர்ட்டைத்தான் பார்ப்பார்கள்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தை பொதுவெளியில் சொன்னதற்கு திருடர்கள் உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்” என மற்றொருவர் கேலி செய்துள்ளார். நகை மற்றும் பணத்தை மறைத்து வைக்கும் ரகசிய இடத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவது, பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக ஆபத்தையே விளைவிக்கும் என்று பலரும் எச்சரித்துள்ளனர். மேலும் திருடர்களை முறியடிக்க புதிய வழி கண்டுபிடித்ததாக நினைத்த அந்தப் பெண்ணின் இந்த ‘பாதுகாப்பு ஹேக்’, தற்போது இணையத்தில் பெரும் நகைச்சுவைப் பொருளாக மாறியுள்ளது.