திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளனர்..

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு கீழ் இயங்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களில் இயங்கக்கூடிய 130க்கும் மேற்பட்ட கல்லூரிகளில்  பயின்ற 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தார்கள். இதையடுத்து ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழக முழுவதும் நடைபெறாமல் இருந்த பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்த பல்கலைக்கழகத்திற்கான தேதி  ஒதுக்கப்பட்டு பட்டமளிப்பு விழாக்கள் நடைபெற்றது..

இந்த நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா ஜனவரி 02 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், அதில்  சிறப்பு விருந்தினர்களாக ஒரே மேடையில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அங்கு  ஆய்வு மேற்கொண்டார். இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 236 ரேங்க் ஹோல்டர் மாணவர்களுக்கும், பிஎச்டி முடித்த 1272 மாணவர்கள் என மொத்தம் 1528 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கில் சுமார் 600 மாணவர்கள் அமர்வதற்கான இருக்கைகள் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்கள் அருகில் இருக்கக்கூடிய மல்டி பர்பஸ் ஆடிட்டோரியத்தில் அமர்ந்து இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகதில் காலை 10:30 மணி அளவில் நிகழ்ச்சிக்கான நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள். இதை முடித்த பின் திருச்சி விமான நிலையத்தின் திறப்பு விழாவில் பிரதமரும், முதல்வரும் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதன் மூலமாக 3 ஆண்டு காலமாக காத்திருந்த மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர்.