தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. தேமுதிக எந்தப் பெரிய கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், அக்கட்சியின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் தனது கோரிக்கைகளைத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின்போது தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தபோதிலும், அதன் பூத் கமிட்டி கட்டமைப்பு மற்றும் களப்பணி அனுபவம் காரணமாக, எந்தக் கட்சியும் தேமுதிகவின் ஆதரவை இழக்க விரும்பவில்லை. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு வித்தியாசம் குறையும் எனக் கருதப்படுவதால், சிறிய கட்சிகளின் ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது.
அதிமுகவின் கே.சி. வீரமணி, ஆர்.பி. உதயகுமார் போன்ற முக்கிய நிர்வாகிகள் பிரேமலதாவைச் சந்தித்த நிலையில், திமுக தரப்பிலும் கே.என். நேரு மூலமாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தேமுதிக தரப்பில் அதிமுகவிடம் வைக்கப்பட்ட கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டமன்றத் தேர்தலில் 20 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா உறுப்பினர் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக மற்றும் பாமக போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு, தேமுதிகவின் இந்த அதிகப்படியான கோரிக்கையால் ஆடிப்போயுள்ளதாகத் தெரிகிறது. மறுபுறம், திமுக தரப்பிலோ 8 அல்லது 9 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா உறுப்பினர் இடம் மட்டுமே உறுதியாக ஒதுக்க முடியும் என்று பதிலளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும், பிரேமலதா விஜயகாந்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பது ஜனவரி மாதம் மதுரையில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில்தான் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
