
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கருப்புக்கொடி ஏந்திய போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நெல்லையில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,தமிழகத்தில் தற்போது திமுக அரசு பலவீனமாக இருப்பதால்தான் தேவையில்லாத பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்கள். முதலில் டங்ஸ்டன் விவகாரத்தை கையில் எடுத்த நிலையில் அதில் மத்திய அரசு நல்ல முடிவை கொடுத்தது. நமக்கு தண்ணீர் கொடுக்காத கேரள முதல்வர் மற்றும் கர்நாடக துணை முதல்வர் ஆகியோரை அழைத்து திமுக அரசு கூட்டம் நடத்துகிறது.
பல வருடங்களாக மொழி கொள்கை பிரச்சனை நடக்கிறது. மத்திய அரசு ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் என்று தான் கூறுகிறது. 90% பேர் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இந்தி மொழி இல்லாவிடில் கூட ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியை கூட படிக்கலாம். மக்களை திசை திருப்புவதற்காக மட்டுமே திமுக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. திமுக அரசு டாஸ்மாக் கடையை குறைப்போம் என்று கூறிவிட்டு தற்போது படிப்படியாக உயர்த்தி வரும் நிலையில் அரசு ஊழியர்களும் திமுக அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் திமுகவுக்கு பாதகமான சூழல் உருவாகும். மேலும் இன்னும் தேர்தலுக்கு கால அவகாசம் இருக்கும் நிலையில் இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.