2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், ஒரு விஷயத்தில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தில் மக்கள் முடிவே இறுதியானது எனத் தெரிவித்ததுடன், தேர்தலில் பெருவெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

திமுக கூட்டணி ஆட்சியை இழந்திருந்தாலும், தமிழகத்தில் மதவாத அரசியலை முன்வைக்கும் பாஜக மற்றும் அதன் கூட்டணிகளைத் தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்தமாக நிராகரித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்னிலம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத் தனக்கு வாக்களித்தவர்களுக்கும், கூட்டணி கட்சித் தோழர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள முகம்மது முபாரக், அமையவுள்ள புதிய அரசு மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைக்காமல், தமிழகத்தின் சுயாட்சி அதிகாரத்தைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மொழி, கலாச்சாரம் மற்றும் நிதிப் பகிர்வு போன்ற அடிப்படை உரிமைகளில் தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றும், விளிம்புநிலை மக்களுக்கான அரசாகப் புதிய அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.