நடப்பு 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்து ஆட்சியிலும் பங்கெடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் – திமுக இடையே கடுமையான அரசியல் அதிருப்தி நிலவி வரும் சூழலில், இன்றைய ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை திமுக முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது.
அதேநேரம், தமிழகத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலும் தங்களின் கூட்டணிக் கடமையை நிலைநாட்டினர்.இக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், மத்திய பாஜக அரசின் தவறான அணுகுமுறையால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கடுமையாகச் சாடினார். “அடுத்தடுத்து நடைபெறும் தேர்வுத் தாள் கசிவு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்;
இதில் பல முறைகேடுகள் அம்பலமாகியும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மௌனம் காக்கிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும், மாணவர்களின் இந்தத் தன்னெழுச்சியான போராட்டம் அனைத்து அரசியல் கட்சிகளுக்குமான எச்சரிக்கை மணி என்றும், இளைஞர்களின் குரலாக ஒலிக்கும் அமைப்புகளை நாம் எதிர்நிலையில் பார்க்காமல், அவர்கள் எழுப்பும் விவகாரங்களை ‘இந்தியா’ கூட்டணி கையில் எடுத்து நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
