மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் எம்.பி. தலைமையில் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று (செப்டம்பர் 18) தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி, கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்தக் கூட்டங்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறவிருக்கின்றன. இந்த கூட்டத் தொடர் இன்று காலை சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் தொடங்கியது. மாலை நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் மாநில நிர்வாகிகளைச் சந்தித்தபோது, கமல்ஹாசன் எம்.பி. பேசுகையில்,
“நான் வாழும் காமராஜர் இல்லை. என்னுடைய இயற்பெயர் பார்த்தசாரதி. ஜாதிகள் இல்லையடி பாப்பா எனப் பாரதி கூறியதை நம்முடைய அரசியல் நோக்காக எடுத்துக் கொண்டுள்ளோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.” எனக் கூறினார். “அரசியல் சுரண்டலுக்கு நிகராக அரசியல் நடைபெறக்கூடாது. நமது அரசியலில் தேசியமும் தேசமும் இணைந்திருக்க வேண்டும். எனக்கு பிறகு கட்சி அழிந்து விடக்கூடாது. புதிய தலைவர்கள் உருவாக வேண்டும்” என்றார். திமுகவில் மநீம இணைந்துவிட்டது என சிலர் விமர்சிக்கின்றனர் என்பதற்கு பதிலளித்த கமல், “திமுக, நீதிக்கட்சியில் இருந்து வந்தது.
நம்முடைய கட்சி பெயரிலும் ‘நீதி’ உள்ளது. இது கூட்டணிக்கே மேற்பட்ட புனிதமான உறவு. ஆசியாவிலேயே மையவாத அரசியலை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்தான். இடது-வலது என நாட்டை பிரிப்பதை அனுமதிக்க முடியாது” என்றார். மேலும் மாநில ஆலோசனையின் போது, மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது, வரும் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற விவகாரங்களுக்கும் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், கட்சியின் அடிப்படை அமைப்பை வலுப்படுத்தும் விதமாக, அனைத்து நிலை நிர்வாகிகளிடமிருந்தும் கருத்து சேகரிப்பும், திட்டமிடலும் நடைபெற்று வருகிறது.
