திமுக சார்பில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இன்று அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதோடு புகழாரம் சூட்டி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது திமுகவை சரமாரியாக விமர்சித்துள்ளார். அதாவது அண்ணா என்ற பெயரை சொல்வதற்கு கூட திமுகவுக்கு அருகதையே கிடையாது என்று கூறியுள்ளார்.

இது பற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, திமுகவினர் மக்களை ஏமாற்றுவதற்காகவும் தேர்தலுக்காகவும் மட்டும்தான் அண்ணாவை பயன்படுத்துகிறார்கள். திமுகவினருக்கு அண்ணா என்ற பெயரை சொல்லக் கூட அருகதையே கிடையாது. போலீசார் ஈசிஆர் விவகாரத்தில் மாறி மாறி வேறு வேறு தகவல்களை கூறுகிறது. திமுக அரசின் அழுத்தம் காரணமாக தான் இப்படி போலீசார் மாற்றி மாற்றி கூறுகிறார்கள். இந்த திரைப்பட வசனத்தை ஈசிஆர் விவகாரத்தை மூடி மறைப்பதற்காக எழுதியுள்ளனர். இனி வேங்கை வயலுக்கு செல்ல பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறினார். மேலும் அண்ணா என்ற பெயரை சொல்லக் கூட அருகதையே கிடையாது என்று ஜெயக்குமார் கூறியது திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.