மராட்டிய மாநிலத்தில் இரு மாணவிகளின் கல்விக்காக அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தினமும் அடர்ந்த காட்டுப் பாதையில் 5 கிலோமீட்டர் தூரம் மலை ஏறிச் சென்று பாடம் நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் மற்றும் முறையான சாலை வசதி இல்லாத மலைக்கிராமத்தில் வசிக்கும் 5 மற்றும் 8 வயதுடைய இரு சகோதரிகள் கல்வி கற்கும் வகையில், ஆசிரியர் ஜீவன் மிதாரி இந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்.
கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ககன்பவ்டா தாலுகாவில் அமைந்துள்ள சிறிய மலைக்கிராமத்தில் மூன்று வீடுகள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு வசிக்கும் இரு சகோதரிகளும் ஜில்லா பரிஷத் பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளிக்கு மோட்டார் சைக்கிள்கூட செல்ல முடியாத அளவுக்கு பாதை மிகவும் கரடுமுரடாக இருப்பதால், ஆசிரியர் தினமும் நடைபயணமாகவே மலைப்பாதையில் சென்று மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக செல்ல வேண்டிய நிலையில், காலை நேரத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மலை ஏறிச் செல்லும் ஆசிரியர், மாலையில் அதே தூரத்தை நடந்து திரும்புகிறார். அவர் செல்லும் வழியில் காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் காட்டு நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவிகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் ஆபத்தான பாதையையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து சென்று வருகிறார்.
மாணவிகள் கல்வியை பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக ஆசிரியர் ஜீவன் மிதாரி மேற்கொண்டு வரும் இந்த அர்ப்பணிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவரது சேவையைப் பாராட்டி சமூக வலைதளங்களிலும் மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலத்துக்காக சிரமங்களை பொருட்படுத்தாமல் பணியாற்றும் அவரது செயல்பாடு, ஆசிரியர் பணியின் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
